திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் குறிவைத்து கோயில் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து வருகின்றனர்.
இதுபோன்ற தொடர் கொள்ளையில் ஈடுபடுவதால் கொள்ளையர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களா? வெளியூர்வாசிகளா? உள்ளூர்வாசிகளா? என்று காவல் துறையினர் குழம்பியுள்ளனர். ஒரே கும்பல்தான் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவருகிறது எனவும் காவல் துறை சந்தேகமடைந்துள்ளது.
நேற்று திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பிரசித்திப்பெற்ற மகா காளியம்மன் கோயில் உள்ளது. புதிதாக புதுப்பிக்கப்பட்டு வழிபட்டு வந்த காளியம்மன் கோயிலில், ஆறு மாதத்திற்குள் நான்கு முறை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதையடுத்து நேற்று இரவு கோயில் பிரகார கதவை உடைத்து உள்ளே சென்று கருவறையில் உள்ள கதவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் முடியாமல் போகவே கோயில் வளாகத்தில் உள்ள வேறு கதவை உடைத்து ஐம்பொன் சிலைகளைத் திருட முயற்சித்தனர். அந்த அம்மன் சிலையை அசைக்கக்கூட முடியாமல் போகவே கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்ட ஆறு மாதங்களில் நான்கு முறை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பரமேஸ்வரன் கோயில் வெடி விபத்துக்கான இழப்பீடு கோரிய வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!