மூன்றாயிரம் சதுரடி கொண்ட துணி கடைகள் மற்றும் இதர கடைகளை நேற்று(ஏப்ரல். 28) முதல் மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் மூன்றாயிரம் சதுர அடி கொண்ட 23 கடைகள் நேற்றைய தினம் மூடப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல். 29) காலை சத்துவாச்சாரி பகுதியில் உள்ள (தீ சென்னை சில்க்ஸ்) பிரபல துணிக்கடையில் முக்கிய நுழைவு வாயில் வழியை மூடிவிட்டு வேறு வழியில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பி வியாபாரம் நடைபெற்று வருவதாக மாநகராட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பின் சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஆய்வு செய்ததில், கடையின் முக்கிய வாயிலை மூடிவிட்டு மாற்று வழியில் சென்று பணியாளர்களை வைத்து வேலை வாங்கி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்தத் துணி கடைக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்ததோடு, மேலும் இனிமேல் தவறு செய்தால் மூன்று மாத காலம் கடையை மூடி விட வேண்டியிருக்கும் என எச்சரிக்கைவிடுத்து சென்றனர்.