வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரோட்டரி ஹாலில் தமிழன் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாநில தலைவர் தமிழன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் திண்டுக்கல், கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் மேடை நடன நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி அளித்தது போன்று வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த அனுமதியை வழங்க வேண்டும். கிராமிய கலைகளை ஊக்குவிப்பது போன்று நடன கலைஞர்களையும் தமிழ்நாடு அரசு ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.