சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சதாப்தி விரைவு ஏசி ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் மாலை 5.30 மணிக்கு இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் முழுக்க முழுக்க ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்திற்கு வழக்கமாக இரவு 7.08 மணிக்கு இந்த ரயில் வந்துசேரும். அந்த வகையில், நேற்று (வியாழக்கிழமை) இரவு சென்னையிலிருந்து சதாப்தி ஏசி விரைவு ரயில் காட்பாடி நிலயத்திற்கு வந்தது.
அப்போது, பயணிகள் திடீரென கீழே இறங்கி வண்டியில் ஏசி வேலை செய்யவில்லை என்று கூறி, அங்கிருந்த ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்குச் சென்ற ரயில் நிலைய அலுவலர்கள் பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
"ஏசி பழுதாகி பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் குடும்பத்துடன் அவதிப்படுகிறோம்; ஊழியர்களிடம் முறையிட்டால் உரிய பதில் ஏதும் இல்லை. எனவே, தொடர்ந்து இந்த ரயிலில் பயணிக்க விரும்பவில்லை" என்று கூறி பயணச்சீட்டை ரத்து செய்யும்படி பயணிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் முத்துக்குமரன், ரயில் நிலைய மேலாளர் ஆகியோர் பயணிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர், அதே ரயிலில் இருந்த தொழில்நுட்பப் பணியாளர்களைக் கொண்டு ஏசி பழுது சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் மீண்டும் ரயிலில் பயணித்தனர். இச்சம்பவத்தால் சதாப்தி ஏசி விரைவு ரயில் சுமார் 45 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது. வழக்கமாக இந்த ரயில் இரவு 10 .20 மணிக்குப் பெங்களூரு சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது