ஆந்திர மாநிலம் வி-கோட்டாவிலிருந்து குடியாத்தத்திற்கு விறகு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அதிகாலை 4.30 மணியளவில் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான மலைப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மலைப்பாதையின் தடுப்புச்சுவரில் மோதி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அந்த விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் குடியாத்தத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவாவும், அதே பகுதியைச் சேர்ந்த உதவியாளர் பரந்தாமனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான லாரியை காலை 8 மணி அளவில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு பேர்ணாம்பட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் 100 அடி பள்ளத்தில் இறங்கி இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மலைப்பாதையில் தரமற்ற தடுப்புச்சுவர்கள் அமைத்ததினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.