வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே செல்லும் நாகநதி ஆறு, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் தொடங்கி செய்யாற்றில் கலக்கிறது. இந்த நதியானது வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில், 366 சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்கிறது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே சலமநத்தம் என்ற பகுதியில் முதற்கட்டமாக 2016ஆம் ஆண்டு, நாக நதியில் நீர்வரத்தை அதிகரிக்க வாழும் கலை அமைப்புடன் அந்தப் பகுதியை சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் இணைந்து நீர் செரிவூட்டும் கிணறுகளை அமைத்தனர்.
அதே ஆண்டில் நவம்பர் 25ஆம் தேதி பல்வேறு கிணறுகளில் நிலத்தடிநீர் அதிகரித்து இருந்தது. அதன் பிறகு 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நாக நதியில் தண்ணீர் வரத் துவங்கியது. கடந்த 6 ஆண்டுகளாக நாக நதி வற்றாத ஜீவ நதியாக மாறி தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 20,000 பெண்கள் ஒன்றிணைந்து செயல்பட்டதை பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தன்னுடைய மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார்.
நாக நதியில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் வருவதை வரவேற்று அப்பகுதி மக்கள் ஆற்றில் மலர் தூவி, பூஜைகள் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று 6 வது ஆண்டாக, அப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வாழும் கலை அமைப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து நாக நதியில் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் கடந்த ஆறு ஆண்டுகளாக அப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பல இடங்களில் நூறு அடி தாண்டியே தண்ணிர் இருக்கிறது, ஆனால் நாகநதிப் பகுதியில் 10 அடியிலேயே தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கண்ணன் கூறும் போது, "2016 ஆம் ஆண்டு வாழும் கலை அமைப்பு அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த நாகநதிப் புனரமைப்பு திட்டம் துவக்கப்பட்டது. 20 அடி ஆழத்திற்கு நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்க பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அந்த நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நாக நதியில் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
இதனை முன்னிட்டு இன்று வாழும் கலை அமைப்பினர், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தண்ணீரை வரவேற்று மலர் தூவி பூஜைகள் செய்யப்பட்டது. இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த அரசும் வாழும் கலை அமைப்பும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் கணியம்பாடி பகுதி 10 அடி ஆழத்திலேயே தண்ணீர் காணப்படுகிறது. இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது" என்றும் அவர் கூறினார்.
வாழும் கலை நாகநதி புனரமைப்பு திட்ட இயக்குநர் டாக்டர் சந்திரசேகரன் குப்பன் கூறுகையில், "2016ஆம் ஆண்டு இந்த திட்டம் துவக்கப்பட்டது. வாழும் கலை அமைப்பு 100 நாள் வேலை திட்டம் பணியாளர்கள் அரசும் இந்த திட்டத்தை இணைந்து செயல்படுத்தப்பட்டது. 20 அடி ஆழத்தில் நீர் செரிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டு நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த நதியில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் வாழும் கலை அமைப்பினர் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் இணைந்து மலர் தூவி பூஜைகள் செய்து தண்ணீரை வரவேற்றோம். இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளோம். இது போன்ற அனைத்து இடங்களிலும் செய்து காட்டினால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. இதனால் விவசாயிகள் பயனடை முடியும், மேலும் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது" என்று கூறினார்.
இதையும் படிங்க: குடியரசு தலைவரை சந்தித்த ஆஸ்கர் பட நாயகர்கள்! ஈடிவி பாரத்துடன் சிறப்பு நேர்காணல்!