வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, எருதுவிடும் விழாக்கள் நடத்தப்படும். ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் விழா நடப்பது வழக்கம். இதற்காக விழாக்குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விழா நடத்தப்படும்.
அதன்படி இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் 78 கிராமங்களில் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது. இதில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் வரை 43 கிராமங்களிலும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் வரை 42 கிராமங்களிலும் எருதுவிடும் விழாவை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூர், பென்னத்தூர், மேட்டு இடையாம்பட்டி ஆகிய இடங்களில் எருது விடும் விழாக்கள் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்றன. இதில், கழிஞ்சூரில் காலை 9.30 மணிக்கு விழா தொடங்கியதும் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் அதிகாரிகளும், விழாக்குழுவினரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பின்னர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள், அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் எருதுவிடும் விழாவை ஆய்வு செய்வதற்காக மத்திய பிராணிகள் நல வாரிய மண்டலத் தலைவரும், ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழுவின் தமிழக பார்வையாளருமான மிட்டல் வந்திருந்தார். அவர் கழிஞ்சூரில் நடைபெற்ற போட்டியை ஆய்வு செய்தபோது, அங்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்தது. குறிப்பாக, தடுப்பு வேலிகள் முறையாக அமைக்கப்படாமல் இருந்தது. தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில் அதைத்தாண்டி காளைகள் ஓடிவரும் பாதையில் கூட்டமாக நின்று கொண்டு மக்கள் ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர். விழாவில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு பார்வையாளர் மிட்டல் உத்தரவின் பேரில் கழிஞ்சூர் எருது விடும் விழா காலை 11.45 மணியளவில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பென்னாத்தூர், மேட்டு இடையாம்பட்டி ஆகிய இடங்களிலும், நெறிமுறைகள் பின்பற்றப்படாததால் எருது விடும் விழாக்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. பின்னர் கழிஞ்சூரில் மட்டும் தடுப்பு வேலிகள் சரிசெய்யப்பட்டு, விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருமணி நேரத்திற்கு பிறகு எருது விடும் விழாவை நடத்த அனுமதிக்கப்பட்டது. எனினும், பென்னாத்தூர், மேட்டு இடையாம்பட்டி ஆகிய இரு இடங்களில் போட்டிகள் நடத்தப்படவில்லை. இச்சம்பவத்தை அடுத்து மாவட்டத்தில் உள்ள பிற கிராமங்களில் அடுத்தடுத்த நாட்களில் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: jacto geo: ஜாக்டோ-ஜியோ அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு!