வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், அணைக்கட்டு பகுதியில் நேற்றிரவு (மார்ச் 31) வாகன சோதனையில் ஈடுபட்டார். இதற்கிடையில் ஊசூர் அடுத்த தெள்ளூரில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவந்த தகவலையடுத்து, பறக்கும் படை அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர்.
அங்கு வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ. 17 ஆயிரம் பணத்தை பறிமுதல்செய்தனர். இதைத்தொடர்ந்து, பணப் பட்டுவாடா செய்யவிருந்த அலமேலுமங்காபுரம் ஏரியூரைச் சேர்ந்த கார்த்திபன் (51), தெள்ளூரைச் சேர்ந்த ராமமூர்த்தி (57) ஆகியோரை அரியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், அரியூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, அங்கு பணத்துடன் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் காவலர்கள் கைதுசெய்தனர்.
இது குறித்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வேலூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.