அரசு மணல் குவாரியில் மோசடி - அரசு அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு? - fraud in the sand quarry
அரசு மணல் குவாரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஒப்பந்ததாரர்கள் ஏற்படுத்தி வருவதாகவும், இதற்கு அரசு அதிகாரிகள் துணை போவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக பாலாறு இருந்து வருகிறது. பாலாற்றை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீருக்காகவும், பல லட்சம் ஏக்கர் விவசாய விளை நிலங்களுக்காகவும் பயன்பெற்று வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலாற்றில் நீர்வரத்து உள்ள நிலையில், அதற்கு முன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்த பாலாற்றால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகின.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பாலாற்று படுகையில் பல காலகட்டங்களில் பல மணல் குவாரிகள் செயல்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வேலூர் அடுத்த அரும்பருதி பாலாற்று பகுதியில் கடந்த ஆண்டு ஏப்.11ஆம் தேதி முதல் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்மணல் குவாரியில் பல்வேறு முறைகேடுகளும், விதி மீறல்களும் நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
அதாவது 4.90 ஹெக்டர் பரப்பளவுக்கு 245மீx200மீ அளவுக்கு ஒரு மீட்டர் ஆழத்திற்கு மிகாமல் 49ஆயிரம் கன மீட்டர் மணல் எடுக்க வேண்டும் என்றும் மனித ஆற்றலால் மட்டுமே மணல் அல்ல பட வேண்டும், ஆற்றின் போக்கு மாறாதவாறும் மணல் அள்ளப்பட வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது அரும்பருதியில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியில் அனைத்து விதிமுறைகளும் மீறப்படுவதாகவும், பாலாற்றில் நீர் வரத்து இருக்கும்போதே மணல் குவாரி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் நாளொன்றுக்கு குறிப்பிட்ட அளவை காட்டிலும் பல லட்சம் யூனிட் அளவுக்கு மணல் அள்ளி விற்கப்படுவதாகவும், அதேபோல அப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடுகாடுகளும் மிகுந்த சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஒப்பந்ததாரர்கள் ஏற்படுத்தி வருவதாகவும், இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழ்நாடு சுன்னத் ஜமாத்தைச் சேர்ந்த செரீப் பாஷா கூறுகையில், “அரும்பருதி பாலாற்று மணல் குவாரியில் நடைபெறும் முறைகேடு மற்றும் விதிமுறை மீறல்கள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கனவே இரண்டு முறை மனு அளித்துள்ளேன்.
ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. எங்கள் மாவட்டம் ஏற்கெனவே வறட்சியான மாவட்டம், நீர் ஆதாரமாக விளங்குவது பாலாறு மட்டுமே. இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மணல் முழுவதையும் அள்ளி விடுவதால் தண்ணீர் தேங்க இடமில்லாமல் நேரடியாக செல்கிறது. இதனால் வரும் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகளின் துணையோடு இக்கொள்ளையானது நடைபெற்று வருகிறது. இதனால் வேலூர் மாவட்டத்திற்கு நில அதிர்வு வரும் என செய்தித் தாள்களில் படித்தேன். கூடிய விரைவில் அதிகாரிகள் தலையிட வேண்டும் என்பது என் கோரிக்கை. அப்பகுதி கிராம மக்கள் என்னிடத்தில் கோரிக்கை விடுத்ததால் பலமுறை ஆட்சியரிடத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இருப்பினும், நேரில் சென்று நான் அப்பகுதியில் படம் எடுத்தேன்.
அப்பொழுது மணல் குவாரியில் இருந்து ராமு மற்றும் கரிகாலன் என்பவர்கள் யார் நீங்கள் என்று கேட்டனர். நான் சமூக ஆர்வலர் என்று கூறியதற்கு படம் பிடிப்பதை விட்டு விட்டு நீங்கள் வீடு போய் முதலில் சேருங்கள், லாரி ஏற்றி விட போகிறது என்று மிரட்டும் பானியில் பேசினர். மேலும், கரிகாலன், ராமு ஆகிய இருவரும் பண மழையில் நனைவதாகவும், இது போதாது என்று செய்தியாளர் என்ற போர்வையில் வலம் வரும் ஒருவர் என் தொலைபேசியில் வந்து அவரும் என்னை மிரட்டினார்.
அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சமூக அக்கறை கொண்டு நான் அந்த இடத்திலிருந்து, என் உயிரை பாதுகாத்து வெளியே வந்தேன்” என்று கூறினார்.
மேலும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதை கண்டறிய தனியாக குழு அமைக்க வேண்டும். குறிப்பாக சிபிசிஐடி விசாரணை அமைத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்: இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அரும்பருதி பாலாற்று மணல் குவாரியில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அளித்த ஆய்வறிக்கையில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு மணல் குவாரி செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இருந்த போதும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதாக தொடர் புகார் எழுந்துள்ள நிலையிலும், மீண்டும் ஆய்வு செய்யப்படும். மேலும் முறைகேடுகள் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். அதேபோல மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு மணல் அள்ளுவது குறித்து மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தப்படும்” என கூறினார்.
இதையும் படிங்க: கூட்டுறவு சங்கத்தில் ரூ.61.58 லட்சம் மோசடி - கோவையில் இருவர் கைது!