சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உள்ள பின்னணிகளை முழுமையாக விசாரணை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
அதன்படி, சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சிநேக பிரியா, ஆவடி துணை ஆணையர் ஜமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகிய மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவில் சைபர் க்ரைம் போலீசார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இருக்கின்றனர்.
முன்னதாக கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது. இதனால், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சிசிடிவி பதிவுகள், ஆதாரங்கள் அனைத்தையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மகளிர் ஆணைய குழுவினர் அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு சிறப்பு புலனாய்வு குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஜன.2) காலை சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்துள்ளனர். மேலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் எந்தெந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது என்பதை நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள், சந்தேகப்படும் நபர்கள் உள்ளிட்ட சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை கண்டறியும் குழு கேள்வி
முன்னதாக, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு ஏற்றது. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஆணையத்தின் துணை செயலாளர் சிவானி தே ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்து அண்ணா பல்கலையில் ஆய்வு நடத்தி விசாரணையும் மேற்கொண்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா குமாரி, பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், தமிழக காவல்துறையினர் அவரை எப்படி வெளியில் நடமாடவிட்டார்கள்? காவல்துறையும் அரசும் ஏன் அவர் மீது முன் கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை'' என காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார்.