வேலூர்: காட்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருபவர் அறிவியல் ஆசிரியர் பாபு. இவரிடம் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்றுவிட்டு தற்போது வெளிநாடுகள் மற்றும் பல துறைகளில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் சுமார் 20 பேர் இணைந்து, ஆசிரியர் பாபு அவர்கள் மாணவர்களுக்குச் சிரமமின்றி பாடம் எடுக்க ஏதுவாக சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் போர்டை வாங்கி கொடுத்துள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “எங்களுக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர் பாபு எங்களிடம் அவ்வப்போது பேசும்போது மாணவர்களுக்கு பாடம் எடுப்பதில் பல்வேறு சிரமங்க்ள் இருப்பதாக தெரிவிப்பார். அதனால் நாங்கள் முடிவு செய்து அவருக்கே தெரியாமல் இந்த டிஜிட்டல் போர்டை வாங்கி கொடுத்துள்ளோம். இது தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது” எனக் கூறினர்.
ஆசிரியர் பாபு கூறுகையில், “இது எனக்கு மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணம். எனது முன்னால் மாணவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் எனது கற்பித்தல் பணி மேலும் சிறக்கும்” எனக் கூறினார்.