வேலூர்: சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் (39), ஜெயக்குமார்(38). இதில், சதீஷ்குமார் ஏற்கனவே வன விலங்கு கடத்தல் தொடர்பாக சிறைக்கு சென்றவர்.
அதன் அடிப்படையில், சதீஷ்குமாரின் செல்போன் எண்ணை சென்னை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சதீஸ்குமாரிடம் யானை தந்தம் உள்ளதாகவும் அதை அவர் விற்க முற்பட்டு வருவதாகவும் சென்னை வனத்துறையினருக்கு தெரியவந்தது.
அவரிடம் யானை தந்தத்தை விலைக்கு வாங்குவது போல் தொடர்புக் கொண்டு வனத்துறையினர் பேசினர். அப்போது வேலூரில் இருப்பதாகவும், அங்கு வந்து யானை தந்தத்தை பெற்றுக் கொள்ளுமாறும் சதீஷ்குமார் கூறியுள்ளார்.
இதையடுத்து சென்னையில் இருந்து வந்த வனத்துறையினர் வேலூர் வனத்துறையினருடன் இணைந்து சதீஷ்குமாரை பிடிக்க திட்டம் தீட்டினர். அதன் அடிப்படையில், வேலூர் சாத்து மதுரை பகுதியில் இருப்பதாக சதீஸ்குமாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து சாத்து மதுரைக்கு நேற்று (டிச.14) காரில் வந்த சதீஷ்குமார் மற்றும் ஜெயக்குமாரிடம் வனத்துறையினர் யானை தந்தத்தை வாங்குவது போல் 23 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசினர். பின்னர் யானை தந்தத்தை காரில் இருந்து வெளியே எடுத்தபோது, இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 16 கிலோ எடை கொண்ட யானை தந்தத்தையும் காரையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்பு இருவரையும் வேலூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கனமழையால் உள்வாங்கிய 60 அடி விவசாய கிணறு