தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இடைத்தேர்தல் நடததுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது. அந்தவகையில், இந்த 18 தொகுதிகளில் வேலுார் மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்கின்றன. ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலை முன்னிட்டு, வட்டாட்சியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது.
அப்போது, அரசியல் கட்சிகள் தரப்பில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு இயந்திரத்தை திறந்து சரிபார்த்தார்.
இதையடுத்து, மூன்று தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களிடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாகக் கொடுக்கப்பட்டன. பின்னர், இவை லாரிகள் மூலம் காவல் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த இயந்திரங்கள்பூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.