வேலூர்: வேலூரின் திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (62). கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.1) இரவு சின்னசாமி டாஸ்மாக்கில் இருந்து மதுவாங்கி வந்து தனது வீட்டில் வைத்து அருந்தியுள்ளார்.
அப்போது மது அருந்துவதற்காக முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிவந்து சாப்பிட்டுள்ளார், சின்னசாமி. இதனைக்கண்ட அவரது பேரன் ருகேஷ் (5), சின்னசாமி வைத்திருந்த தின்பண்டங்களைச் சாப்பிட வீட்டிற்கு வந்துள்ளார்.
மதுபானத்தை அருந்திய சிறுவன்
சிறுவன் தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்க, சின்னசாமி தான் குடித்தது போக மீதி மதுவை, அதே இடத்திலேயே வைத்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்க்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ருகேஷ், சின்னசாமி மீதம் வைத்திருந்த மதுவை குளிர்பானம் என நினைத்து அருந்தியுள்ளான்.
அப்போது சிறுவன் மது அருந்தியதைக் கண்டு பதறிப் போன சின்னசாமி, உடனடியாக சிறுவனின் பெற்றோரை அழைத்து நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளார்.
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுவனின் தாய் விஜயா, சின்னசாமியை கடுமையாகத் திட்டியுள்ளார். இதில் சின்னசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சின்னசாமி, சிறுவன் ருகேஷ் ஆகிய இருவரையும், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.
சிறுவன், தாத்தா இருவரும் உயிரிழப்பு
அப்போது சின்னசாமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனும், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நண்பனை ஓட ஓட வெட்டிக் கொன்றவர் காவல் நிலையத்தில் சரண்!