வேலூர்: திமுக பொதுச் செயலாளரும், காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளருமான துரைமுருகன் தற்போது கொரட்டூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முன்னதாக அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்திடம் தகவலை உறுதி செய்வதற்காக தொடர்புகொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. மேலும் அவரது நெருக்கமான வட்டத்தினரும் துரைமுருகனுக்கு கரோனா தொற்று இருப்பதை மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம், துரைமுருகன் வாக்குப்பதிவு செய்த டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தேர்தல் அன்று பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுமா என்று கேட்டதற்கு ’ஆம்’ என்று பதிலளித்துள்ளார்.
துரைமுருகனுக்கு கரோனா தொற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், ஆட்சியரின் இந்த பதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.