வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 22) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (நவம்பர் 21) நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று பேசினார்.
அப்போது, அவருக்கு பக்கத்தில் இருந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், அமைச்சர் ஜெயகுமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவரின் மகன்களும் எம்.பி.,யாக இல்லையா?.
பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, வசுந்தரா தேவியின் மகன் வசுந்தர் சிங், யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜயந்த் சின்ஹா, மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி, பியூஸ்கோயலின் மகன், கோபிநாத் முண்டேவின் மகள், உ.பி., முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இல்லையா?.
இப்படி, பாஜகவில் பலர் வாரிசு அரசியல் செய்கிறார்கள். இதை எல்லாம் அமித்ஷா ஒழித்து விட்டாரா? இவற்றையெல்லாம் பிகாரில் பேசலாம், ஆனால் இது தமிழ்நாடு. புள்ளி விவரங்களை திருப்பித் தருவதில் நாங்கள் வேகமாக இருப்போம்" என்றார்.