வேலூர்: மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், கால்வாய் அமைக்கும் பணிகள், பாதாளச் சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் மூலம் வழங்கப்படும் குடிநீர் மற்றும் வீடுகளில் இருந்து சேகரிக்கும் திடக்கழிவுகள் ஆகிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை வசதிகளை உடனடியாக சீர்செய்ய வேண்டும். ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ள சாலைகளை விரைவாக முடிக்க வேண்டும். பழுதடைந்து உள்ள சாலைகளை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை போடும் பொழுது குறிப்பிட்ட தெருக்களில் கால்வாய் வசதி சீராக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
ஓரிரு மாதங்களில் பருவ மழை தொடங்க உள்ளதால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களை முறையாகத் தூர்வார வேண்டும். இதற்காக நகராட்சியில் உள்ள ஜே.சி.பி போன்ற வாகனங்களை முறையாகப் பராமரித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஒவ்வொரு மாதமும் இது போன்ற ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும். ஒவ்வொரு கூட்டத்திலும் தெரிவிக்கப்படும் பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்” என மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “உச்ச நீதிமன்றத்தில் காவிரி நீர் தொடர்பான பிரச்சனை வழக்கை அவசர வழக்காக விசாரிக்கத் தேவையில்லை எனக் கர்நாடக அரசு கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம் மீண்டும் வரும் 21-ஆம் தேதிக்கு
வழக்கைத் தள்ளி வைத்துள்ளது. அன்று தமிழக அரசு தங்களுடைய கருத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும்” எனக் கூறினார்.
மேலும், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகக் கூறினார். மாநகராட்சிகளின் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், த.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், உள்பட பலர் பங்கேற்றனர்.