வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டரந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(37) இவர் மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். தனது வீட்டில் வளர்த்து வரும் மாடு ஒன்றை மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்க வைக்க வளர்த்துவந்துள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை குவித்த தனது மாட்டிற்கு "ஒன் மேன் ஆர்மி" என்று குமார் பெயர் வைத்துள்ளார். அந்த மாடு கர்ப்பம் அடைந்ததால் மனிதர்களைப்போல ஊரை அழைத்து சீமந்தம் நடத்த குமார் முடிவு செய்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குமாரின் பெற்றோர் பொதுமக்கள் நம்மை பார்த்து சிரிப்பார்கள் என்று கூறியுள்ளனர். எனினும் மாட்டிற்கு சீமந்தம் நடத்த குமார் முடிவு செய்துள்ளார். இதற்காக வீடுவீடாகச் சென்று பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர், ஊரில் உள்ள மைதானத்தில் பந்தல் போடப்பட்டு பிரியாணி சமைத்து சீமந்தத்திற்கான ஏற்பாடுகளை தடல்புடலாக செய்துள்ளார். மாட்டிற்கு சீமந்தம் என்பதால் அதை காண ஊர் பொதுமக்களும் ஆவலுடன் வந்தனர். குமார் வீட்டில் இருந்து ஒன் மேன் ஆர்மி எனப்படும் அந்த மாடு மாலை மரியாதையுடன் ஊர்வலமாக மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டது. பெண்களுக்கு சீமந்தம் நடத்தும்போது தாம்பூலத்தட்டுகளில் பழங்கள் வைத்துக்கொண்டு ஊர்வலமாக மேளதாளங்களுடன் வந்தனர். அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது. பின்னர், பெண்கள் மாட்டிற்கு சந்தனம் குங்குமம் பூசி சீமந்த சடங்குகளைச் செய்தனர் பெண்களுக்கு வளையல் போடுவது போல் மாட்டிற்கும் வளையல் போட்டு சீமந்தம் நடத்தினர்.
இதுகுறித்து குமார் கூறுகையில்,
”என் வீட்டில் எனது பெற்றோருக்கு பெண் குழந்தை இல்லை, எனவே தங்கை இல்லாத குறையைப் போக்கும் வகையில் எனது மாட்டிற்கு சீமந்தம் நடத்த ஆசைப்பட்டேன். மாடு கன்று குட்டி ஈன்றதும் அதையும் என் பிள்ளை போல் வளர்ப்பேன். சீமந்த நிகழ்ச்சிக்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் செலவு செய்துள்ளேன். பணம் எனக்கு முக்கியமில்லை நான் ஆசையாக வளர்த்த மாடுதான் முக்கியம் வளைகாப்பு நடத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
பணம் அதிகம் செலவாகும் என்பதால் பெற்ற பிள்ளைகளுக்கே சீமந்தம் நடத்த தயங்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் குமார் தான் ஆசையாக வளர்த்து வரும் மாட்டுக்கு சீமந்தம் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.