வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட அதற்கான தேவைகளை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வேலூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 25) நடைபெற்றது.
இந்த கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இக்கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் பேசுகையில், வேப்பங்குப்பம் ஊராட்சியில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் உடனடியாக மதுக்கடையை அகற்ற வேண்டும் என கூறினர்.
மேலும், ஏரிகளை தூர்வாரி விவசாயிகள் பயன் பெறும் வகையில், வழிவகை செய்ய வேண்டுமென கூறினர். இதேபோல் சேனூரிலும் பள்ளி அருகாமையில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் எனவும், கிராமப்புறங்களில் முழுவதுமாக மதுக்கடைகளை மூட வேண்டுமென பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி கோரிக்கை வைத்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் பேசிய ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராமங்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு, இடுகாடு உள்ளிட்ட பல்வேறு விதமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், வேலூர் மாவட்டத்தில் சில கிராமங்களுக்கு இடுகாடு வசதி குறைவாக உள்ள ஊராட்சிகள், எரிமேடை இல்லாத ஊராட்சிகள் அருகாமையில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி தகன மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அதேபோன்று சாலை வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு வனத்துறை அனுமதி பெற்று சாலை வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும் என கூறினார்.
மேலும், கிராமப்புறங்களில் கறவை மாடு தேவைப்படுவோருக்கு ஊராட்சி மன்றத் தலைவர்களும், அரசு அலுவலர்களும் கணக்கெடுப்பு நடத்தி, அதனை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினால் அதற்கான நிதி வங்கிகள் மூலம் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சுய தொழில் செய்ய விரும்பும் நபர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு சுயதொழில் செய்ய வங்கி கடன் வழங்கவும், மற்ற தேவைகளை வழங்கிடவும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் செய்ய வேண்டுமென ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், ஈஸ்வரப்பன் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு; பதிவு, முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது எப்படி?