வேலூர்: பள்ளிகொண்டா பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) பார்த்திபனுக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில், மாவட்ட பறக்கும் படை, தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில், உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று (மே.29) நள்ளிரவு 1.30 மணியளவில், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது வாணியம்பாடியில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இச்சோதனையில் 12 டன் எடை கொண்ட 253 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்து, தொரப்பாடியில் உள்ள அரசு தானியக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
பின்னர் லாரி ஓட்டுநர் அரவிந்து (28) மீது, உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர் கைது!