திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தபட்டியைச் சேர்ந்தவர் வீரய்யா. அந்தப் பகுதியில் ஒருவருக்கு நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் திமுக நிர்வாகியான ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எலந்தபட்டி மாரிமுத்து ஆதரவில் அந்த நிலத்திற்கு மற்றொரு நபர் சொந்தம் கொண்டாடினார். இதனால் வீரய்யா தரப்பினர் சட்டப்படியாக வழக்குகளைச் சந்தித்துவருகின்றனர்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன் வீரய்யா தரப்பினர் புதிதாக வாங்கிய நிலத்தில் கொட்டகை அமைப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த திமுக நிர்வாகிகள் எலந்தபட்டி மாரிமுத்து, பி.எம்.ஆர். மகேஷ், மதிமுக ராமையா, வீரய்யா தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் வீரய்யா, அவரது மனைவி, மகன், சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இதையடுத்து இன்று (ஜனவரி 10) காலை 5 மணியளவில், வீரய்யாவை வேலைக்கு அழைத்துச் சென்ற கூலியாளின் வீட்டிற்கு அரிவாள், உருட்டுக் கட்டையுடன் சென்ற மாரிமுத்துவின் ஆட்கள் வீட்டின் கதவு, ஜன்னல், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். வீரய்யாவுக்கு ஆதரவாக இருந்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் திமுக நிர்வாகிகள் எலந்தபட்டி மாரிமுத்து, மாவட்ட வர்த்தக அணியின் துணை அமைப்பாளர் எம்.ஆர். மகேஷ், ராமையா மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நிலத்தகராறு தொடர்பாக திமுகவைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவக் காப்பீடு வசதி தொடங்கிவைத்த ஸ்டாலின்