கரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்க்கொண்டுள்ளது. இந்தியாலும் இதன் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 969 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமய மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு தமிழ்நாடு வந்த பலருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் 39 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மருத்துவக் குழுவினர் இரவு பகலாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் ஒரு நோயாளி மட்டும் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டு பிடித்து வந்துள்ளார். எனினும் மருத்துவக் குழுவினர் பொறுமையுடன் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மருத்துவர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளிக்க சென்றார். அப்போது மருத்துவரின் முகத்தில் அந்த நோயாளி எச்சிலை துப்பி உள்ளார். அதோடு, தான் அணிந்திருந்த முக கவசத்தையும் கழட்டி மருத்துவர் மீது வீசியுள்ளார்.
இதையடுத்து அந்த மருத்துவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் அந்த நோயாளி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருத்துவர் மீது கரோனா நோயாளி எச்சில் துப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...தொற்று இருக்கா? இல்லையா? - கன்ஃபியூஸான அலுவலர்களின் அலட்சியத்தால் விழுப்புரத்தில் மாயமான டெல்லி இளைஞர்