திருச்சி: வையம்பட்டி அருகே துலுக்கம்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி குணா (29). இவர் தனது மகள் லித்திகாவுடன் (8) விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து தனது உறவினருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றில் தாய், மகள் இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி லித்திகா கிணற்றில் தவறிவிழுந்துள்ளார். இதனைக் கண்டு பதற்றமடைந்த குணா மகளை மீட்க சட்டென கிணற்றில் குதித்துள்ளார்.
சிறுமியை மீட்ட சிறுவன்
தாய், மகள் இருவரும் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சலிட்டுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவன் லோஹித் (9) உடனடியாக கிணற்றில் குதித்து லித்திகாவைக் காப்பாற்றினார்.
ஆனால் கிணற்றில் மூழ்கி சிறுமியின் தாய் குணா உயிரிழந்தார். இது தொடர்பாக வையம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
சிறுவனைப் பாராட்டிய ஆட்சியர்
கிணற்றில் விழுந்த சிறுமி லித்திகாவை மீட்ட சிறுவன் லோஹித்தை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, ஆட்சியரகத்திற்கு நேரில் வரவழைத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கியதுடன், சிறுவனின் துணிச்சலையும் பாராட்டினார்.
இதையும் படிங்க: வாயை திறந்தே கின்னஸ் சாதனை!