திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி ஆவரங்காட்டில் உள்ள பொன்னர் - சங்கர் கோயில் திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மருங்காபுரி வட்டாட்சியர் சத்தியபாமா ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் 900 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. சீறி வரும் காளைகளை அடக்க ஒரு பிரிவுக்கு 50 வீரர்கள் வீதம் 5 பிரிவுகளாக களம் இறக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, கட்டில், கிரைண்டர், மின்விசிறி, மிக்சி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்படுகிறது.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பாதுகாப்பு பணிக்காக திருச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியா வுல் ஹக் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காளைகள் முட்டியதில் சுமார் 50க்கும் மேலானோர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்றனர். மேலும், உயர் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காணும் பொங்கல்: சென்னை முழுவதும் பாதுகாப்புப்பணியில் பத்தாயிரம் போலீசார்
மிகவும் பிரசித்தி பெற்ற ஆவரங்காடு ஜல்லிக்கட்டை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு வீீரர்களை உற்சாகப்படுத்தினர்.