திருச்சி விமானம் நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த அசாருதீன் 188 கிராம் தங்கமும், அப்துல் ஹமீது 189 கிராம் தங்கமும், தேவக்கோட்டையைச் சேர்ந்த செல்லம் 159 கிராம் தங்கமும் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து விமானம் வந்தது. இதில் வந்த கீழக்கரையைச் சேர்ந்த முகமது யாசர் என்ற பயணி 327 கிராம் எடை கொண்ட தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டறிப்பட்டது.
மேலும் இதைத் தொடர்ந்து துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரிடமிருந்து 546 கிராம் தங்கமும், எஸ்.பி.பட்டிணத்தைச் சேர்ந்த பவுசல் ஹக் என்பவரிடமிருந்து 532 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரிடமும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாய், மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி வந்த மூன்று பேரும் நகைகளாகவும், பசை வடிவிலும் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். இந்த ஆறு பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மொத்தம் 1,942 கிராம் ஆகும். அதன் மதிப்பு ரூ. 74.9 லட்சமாகும்.
ஒரே நாளில் மூன்று விமானங்களில் ஆறு பயணிகள் அடுத்தடுத்து தங்கம் கடத்தி வந்தது, திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: சென்னையில் கடத்தல் தங்கம் பறிமுதல்!