திருச்சி: மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரியலுார் மாவட்டம், குழுமூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன்(55) என்பவர் ஏப். 4ஆம் தேதி சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவர், 5ஆம் தேதி காலை, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், மருத்துவமனை சார்பில், உடல் உறுப்பு தானம் குறித்து, அவரது குடும்பத்தினரிடம் விளக்கிக் கூறப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களுக்கு உடல் உறுப்புகள் தானம்: மூளைச்சாவு அடைந்த இளங்கோவன் உடல் உறுப்புகளை தானமாக வழங்க, அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று, மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) நெறிமுறைகளின்படி, அவரது சிறுநீரகம் ஒன்று, திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கும், கண்கள் திருச்சியை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் நெல்லை மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரை மருத்துவமனைக்கும், இதயம் சென்னை மருத்துவமனைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து, டீன் வனிதா கூறியதாவது, “மூளைச்சாவு அடைந்த ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம், 8 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்ட முதல் நிகழ்வு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் கரோனா பெரும் தொற்று காலத்தில் நடைபெற்றது. தற்போது, 2ஆவது முறையாக, உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. மேலும், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்” என்றார்.