திருச்சி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் புதிய நிர்வாகிகள் இணையும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறியதாவது, “தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அடுக்கடுக்காக அநீதிகளை ஏற்படுத்தி வருகிறார்.
தொடர்ந்து ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், மாநில உரிமைகளில் தலையிடுவதாகவும் இருக்கிறது. இத்தகைய செயல்பாட்டை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு நான் இருக்கும் வரை கையெழுத்து இட மாட்டேன் என அகங்காரத்தோடு அவர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக, நியாயமாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். நீட் தேர்வின் போது ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாக வருகிறது. ஆனால் அதற்கு நேர் எதிர்மறையான கருத்துகளைக் கூறுவது, அரசை விமர்சனம் செய்வது என ஒரு தனி அரசாங்கத்தை இவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதனை ஒரு காலமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை போன்ற பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். மேலும் அந்நியர்கள் யார் என்று ஆளுநரே பட்டியல் போட்டு தரட்டும்.
அவர்கள் அனைவரும் அந்நியர்களா, இல்லை இந்நாட்டின் மைந்தர்களா என்று தெரியும். அவர்கள் நம் நாட்டின் விடுதலைக்கு எவ்வளவு பங்காற்றி உள்ளார்கள். கல்வி வளர்ச்சிக்கு எவ்வளவு போராடினார்கள் என்று தெரியுமா? சிறுபான்மையினர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என இவர்களின் தியாகம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆளுநர் பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆகையால் என் மண்ணில் வாழ்கின்ற இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தியாகம் அவருக்குத் தெரியாது.
முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தால் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள், மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றால், இந்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியாவாக மாறும் என்று சொன்னவர்கள் எதையும் செய்யவில்லை. குறிப்பாக தமிழ்நாடு மக்களுக்கு என்ன வாக்குறுதி கொடுத்தார்களோ அது எதையும் நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டின் முக்கியமான பிரச்சினை, டெல்டா மாவட்டங்கள், விவசாயிகள் குடிநீர் மற்றும் விவசாயம் செய்ய காவிரி ஆற்றை நம்பி இருக்கிறார்கள். ஏற்கனவே கர்நாடக அரசு பல அணைகள் கட்டி தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரைத் தரவில்லை. மேலும் பாஜக, காங்கிரஸ் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கூடி தண்ணீரை தர மறுக்கிறார்கள். மேலும் கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதேபோன்று தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, மதிமுக என அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆளும் கட்சி, எதிர் கட்சி என வேறுபாடு இல்லாமல் காவிரி எங்கள் வாழ்வுரிமை என போராட வேண்டும். இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி அறைகூவல் விடுகிறது. குறிப்பாக முதன் முதலில் இந்த பிரச்னைக்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான்.
தமிழ்நாட்டில் எந்த விதமான விபத்துக்களில் உயிர் இழந்தாலும் அவர்களுக்கு ஒரே மாதிரியான நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும். இதற்கு மாநில அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். உயிர் என்பது பொது தான், ஆகையால் விபத்துக்களை பொறுத்து நிவாரண தொகை வழங்குவது சரியில்லை.
மேலும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பத்திரிக்கையாளர், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் இலவசமாக செல்ல அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அனுமதி அளிக்காத சுங்கச்சாவடியை உடனடியாக இழுத்து மூட வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: B20 Summit India 2023 : B20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று சிறப்புரை!