திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் 50ஆவது ஜீயராக இருந்த ஸ்ரீமத் சங்கர நாராயண ஜீயர் 2018ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து தற்போதுவரை புதிய ஜீயர் நியமனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலின் 51ஆவது ஜீயர் நியமனத்திற்கு நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி இப்பதவிக்கு தகுதி உடையோர் வரும் ஜூன் 8ஆம் தேதி மாலை நான்கு மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
இதற்கு இந்து மதத்தின் ஆச்சாரிய சம்பிரதாயத்தைச் சேர்ந்த சன்னியாசம் பெற்ற கோயில் ஆகமங்களையும், வழிபாட்டு முறைகளையும் அறிந்தவர்களே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் தகுதிகளும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இப்பதவிக்கு நியமனம் செய்வோர், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் 56(1) பிரிவின்கீழ் திருக்கோயில் நிர்வாகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர். கட்டுப்படுத்தக் கூடியவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள், மடாதிபதிகள், ஸ்ரீரங்கம் கோயில் ஆர்வலர்கள், பக்தர்கள் எனப் பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில், இந்த அறிவிப்பை ரத்து செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். கோயில் இணைய தளத்தில் இருந்த விளம்பர அறிவிப்பும் நீக்கப்பட்டுள்ளது.