திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 73ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் வெற்றியினை வானில் பறக்கவிடும்வகையில் வண்ண பலூன்களையும், சமாதானத்திற்காக வெண்புறாக்களையும் வானில் பறக்கவிட்டார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பைப் பார்வையிட்ட அவர், காவல்துறையினரின் மிடுக்குடனான அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 127 காவலர்களுக்குக் குடியரசு தின பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதையடுத்து, 489 அரசு அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் மற்றும் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு துறையினருக்குச் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார். கரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டு, பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், விழா மேடையில் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.
இதனால், குடியரசு தின விழா வழக்கமான உற்சாகமின்றி நிறைவடைந்தது. மேலும், திருச்சி மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி நடத்தப்படும் கிராமசபைக் கூட்டங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு நிராகரித்த அலங்கார ஊர்திகள்