திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "நடிப்பது மட்டுமே நாடாளும் தகுதியாகாது. அரசியல் என்பது தத்துவம், கொள்கை போன்றவற்றை கொண்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்கள் நீண்ட நாட்கள் அரசியிலில் ஈடுபட்டு பின்னர் தான் முதலமைச்சர் பதவிக்கு வந்தனர்.
அதுபோல் நீண்ட நாட்கள் அரசியிலில் ஈடுபட்டு பதவிக்கு வருவதை ஏற்கலாம். ஆனால் ரஜினி நடந்து முடிந்த இடைத்தேர்தல்கள் உள்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் நேரடியாக முதலமைச்சர் பதவிக்குத்தான் வருவேன் என்று கூறுகிறார்.அதனை ஏற்க முடியாது. தமிழ்நாட்டு அரசியிலில் சரியான ஆளுமை இல்லை என்று ரஜினி கூறுவது அவரை வாழ வைத்த இனத்தை அவமதிக்கும் செயல்.
பெருமளவில் அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த மண் இது. அளப்பறிய ஆற்றல்களுடன் எண்ணெற்ற இளைஞர்கள் இந்த மண்ணில் உள்ளனர். அவர்களையெல்லாம் ரஜினி குறைத்து மதிப்பிட்டு ஆளுமை இல்லை ஆளுமை இல்லை என்று கூறி வருகிறார். அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதால் அவர் தலைவராகி விட முடியாது" என்றார்.
இதையும் படிங்க: ’திருக்குறளின் அடிப்படை கோட்பாட்டிற்கு எதிராக இந்து மதக்கோட்பாடு இருக்கிறது’ - திருமா