திருச்சி: மணப்பாறை அருகே உள்ள பூங்குடிபட்டி பகுதியில் தனி நபருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு தோட்டப் பணியாளராக கரிச்சாம் பட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணி கடந்த இரண்டு மாதங்களாக தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இவருக்கும், அதே தோட்டத்திற்கு அவ்வப்போது உழவுப் பணிக்காக செல்லும் கே.உடையாப்பட்டியைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் சந்திரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கொலை முயற்சி
இந்நிலையில் நேற்று (ஆக.18) காலை சந்திரன் கையில் காயத்துடன் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதைக் கண்ட மணப்பாறை காவல் துறையினர் காயத்திற்கான காரணம் குறித்து சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தன்னை பூங்குடி பட்டியைச் சேர்ந்த தமிழழகன், கரூர் மாவட்டம் நாகனூரைச் சேர்ந்த கன்னி குரந் ஆகியோர், முன்விரோதம் காரணமாக வெட்ட வந்தபோது கையில் காயத்துடன் தான் தப்பிவந்து விட்டதாகவும், பாலசுப்பிரமணி (58) நள்ளிரவில் இருந்து தன் அழைப்புகளை எடுக்கவில்லை என்பதால் அவர் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவரைக் காப்பாற்றுமாறும் கோரியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், தோட்டத்தில் உள்ள குடிலில் முகம், கழுத்து, கண் பகுதிகளில் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த பாலசுப்ரமணியனை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவர் கைது
இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருச்சியில் இருந்து மோப்ப நாய் வரவழைத்து, சம்பவ இடத்தை சோதனை செய்தனர். அப்போது மோப்ப நாய் தோட்டத்தின் முகப்பில் இருந்த வீடு வரை ஓடி நின்றுவிட்டது.
இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை காவல் துறையினர் டிராக்டர் ஓட்டுநர் சந்திரன் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த தமிழழகன், கனி உள்ளிட்ட இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த பாலசுப்ரமணியன் இன்று (ஆக 18) மாலை உயிரிழந்தார். தற்போது கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் மணப்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு - செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு