திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தொடர் கண்காணிப்பில் வைக்கப்படும் நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தனி வார்டும் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. ஒருவேளை கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகள் வருகைதந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வார்டில் அனைத்து வசதிகளும் தயாராக உள்ளன.
திருச்சியில் தற்போது நான்கு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை. இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகிய மூன்றுமே அவர்களுக்கு இல்லை. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாருக்கும் கொரோனா தாக்குதலுக்கான அறிகுறி இல்லை.
திருவாரூர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படும். தனியார் மருத்துவமனைகளிலும் தனித்துவமான அறை அமைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்கள், நுண்ணுயிரியல் வல்லுநர்கள் அந்த அறைகளை ஆய்வுசெய்வார்கள். அந்த அறை தனிமைப்படுத்தப்படும், எங்களது வழிகாட்டி நெறிமுறைகளுக்குள்பட்டு இருக்கிறதா? என்பது ஆய்வுசெய்யப்படும்.
ஆய்வு முடிவு அறிவிப்புக்கு பின்னரே நோயாளிகள் அதில் அனுமதிக்கப்படுவார்கள். அதனால் எந்தவிதமான பதற்றமும், பயமும் தேவையில்லை. கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி அதிகமாக உள்ளதால், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி - கொடிவேரி தடுப்பணை அருவிக்குச் செல்ல தடை!