திருச்சி: கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், செயலாளர்களுக்கு பதில் அமைச்சர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், புதிய கல்வி கொள்கை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை சொல்ல தயாராக இருக்கிறோம் என்றும், அமைச்சர்களுடன் கூட்டத்தை நடத்துவதே ஏற்புடையது என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. அவரின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு, ஏற்கனவே அறிவித்ததன்படி மாநில கல்வி செயலாளர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளது.
இதனால், புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மும்மொழிக் கல்வி கொள்கையை திணிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை உள்ளது.
புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனையில் அமைச்சர் என்ற முறையில் பங்கேற்க அனுமதிகோரி அனுப்பிய கடித்தத்திற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. நாங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வராததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை, பங்கேற்கவில்லை என்று கூறுவதே சரி. இது அரசியல் செய்வதற்கான களம் இல்லை. மாணவர்களின் எதிர்காலம் தொடர்பானது" என்றார்.
இதையும் படிங்க: கல்வி வள்ளல் கே. துளசி வாண்டையார் மறைவு வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்