தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கண்ணையன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனத்தில் குளறுபடி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளின் பேராசிரியர் காலி பணியிடங்களை ஒன்றாக இணைத்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே கருத்தைதான் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பணியிடங்களை நிரப்பினால்தான் முறையாக இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியும். ஆனால் சில பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு துறையையும் தனித்தனியாக கணக்கீட்டு பேராசிரியர் நியமனம் நடைபெறுகிறது. ஒரே ஒரு பணி நியமனம் என்றால் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இத்தகைய ஒரு நபர் நியமனம் என்பது தலைமைச் செயலர், டிஜிபி, துணைவேந்தர் போன்ற உயர் தலைமை பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். பேராசிரியர் பணியிடங்களுக்கு இது பொருந்தாது.
மத்திய அரசு இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக துறை வாரியாக பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. இதனால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது.
இதனால், மத்திய அரசின் சட்டப்படி பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துறைகளின் பேராசிரியர் காலி பணியிடங்களை தொகுப்பாக ஒன்றிணைத்து பணி நியமனம் செய்ய வேண்டும்" என்றார்.