தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் குடி தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்று அலைய வேண்டிய சூழ்நிலை உருவானது. ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கத்தால் வனவிலங்குகள் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழுந்த நிகழ்வுகளும் நடந்தன. இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நல்ல மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த மழையால் சாலைகளில் நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனத்தை மெதுவாகச் செலுத்தினர். மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீருக்காக பல்வேறு கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.