மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் பல மாநில விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடுமையாக முயற்சி செய்துவருகிறது.
இதற்கிடையில் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி செல்ல தயாராக இருந்தனர்.
இன்று திருச்சியிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை திருச்சி ரயில் நிலையத்தில் கூடினர். அப்போது அங்கு தயாராக இருந்த காவல் துறையினர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை டெல்லி செல்லவிடாமல் தடுத்தனர்.
அவர்கள் அனைவரையும் கைதுசெய்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு டெல்லி புறப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை காவல் துறையினர் திருச்சி உறையூர் அண்ணாமலை நகரில் வீட்டுக்காவலில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடும் குளிரில் போராடும் விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் எல். முருகன் - கனிமொழி