திருச்சி: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு சிலை திறப்பு விழா மற்றும் ஒரத்தநாடு பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் திறமையற்ற முதலமைச்சர் இருக்கிறார். அதே போன்று, காவல்துறையினர் தமிழகத்தில் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து, இதுவரை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மேலும் கள்ளச்சாராயம், பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், கொலை, கொள்ளை போன்ற அனைத்து சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடனடியாக திறமையற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். திமுக அரசு மக்களின் நலனின் எந்த ஒரு அக்கறையும் காட்டாமல் வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது" என்று அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மேலும், "பல முறை தமிழக சட்டப் பேரவையில் கள்ளச்சாராயம், போலி மதுபானத்தை தடை செய்ய வேண்டும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என குரல் கொடுத்தும், இதுவரை செவி சாய்க்காத அரசு தான் இந்த அரசு" எனக் கூறினார்.
"நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் தனியார் ஆலையில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது இரவு நேரத்தில் அங்கு பெட்ரோல் கொண்டு வீசப்பட்டு உள்ளது. உயிருக்குப் போராடும் நிலையில் வடமாநில தொழிலாளர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இது போன்று தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது" என்று கூறினார். மேலும் பேசிய அவர், "இந்த திமுக அரசு விடியாத அரசு; திறமையற்ற முதலமைச்சர், திறமையற்ற அமைச்சர்கள் என இருப்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்று குற்றம் சாட்டினார்
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பலி.. விழுப்புரம் விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின்!