திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜீவித்குமார் (20). இவர் அண்ணா பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் அதேபகுதியை சேர்ந்த பெண்கள் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 30ஆம் தேதி, சமயபுரம் பகுதியிலுள்ள கொள்ளிடம் ஆற்று பாலத்தில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்தனர். இதனை ஜீவித்குமார் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், ஜீவித்குமாரை தூக்கி கொள்ளிடம் ஆற்றில் வீசினர். அவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஜீவித்குமாரை ஆற்றில் தூக்கி வீசிய மண்ணச்சநல்லூர் தேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் கலையரன் (22), புள்ளம்பாடி மணக்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் கோகுல் (21) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை ஸ்ரீரங்கம் நீதித்துறை நடுவர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் காவலர்கள் அடைத்தனர். காவலர்களின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகவுள்ள அவர்களது நண்பர்களையும் காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட ஜீவித்குமார் உடல் மூன்று நாட்களுக்கு பின்னர் கரை ஒதுங்கியது. பனையபுரம் அருகே மீட்கப்பட்ட அவரது உடல், உடற்கூறாய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பெண் சிசுவை முட்புதரில் வீசிய கொடூரம்... உயிருடன் மீட்பு!