திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினி நேற்று (மே.10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. 300 மருந்துகளில் முதல் நாள் 184 மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது. தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்று மேலும் 300 மருந்துகள் வந்துள்ளது. இன்றும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. ரெம்டெசிவர் மருந்துகள் 3 மாதங்கள் தான் பயன்படுத்தப்படும் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்பு 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதனால் ஏற்கனவே ஒட்டப்பட்ட காலாவதி தேதியின் மீது புது தேதி ஒட்டப்பட்டது. இதனால் யாருக்கும் அச்சம் தேவையில்லை. இந்த மருந்தை மருந்தை தயாரிப்பு நாளிலிருந்து 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 450 படுக்கைகள் உள்ளன. கூடுதலாக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. அதேபோல், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 50 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. கூடுதலாக 30 படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஒரு நாளொன்றுக்கு 6 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. அதில் 12 முதல் 14 விழுக்காட்டினருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது. எனவே ரெம்டெசிவர் உள்ளிட்ட எந்த மருந்தையும் கள்ள சந்தைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் தான் கரோனா தொற்றுப் பரவலை குறைக்க முடியும். எனவே மக்கள் அநாவசியமாக வெளியே வர வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க: ’தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிட வேண்டாம்’ - மத்திய அரசு