மேட்டூரில் குறுவை சாகுபடிக்காக கடந்த 12ஆம் தேதி தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அந்த நீர் 15ஆம் தேதி இரவு கல்லணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வரும் நீரை 16ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்டா பாசன விவசாயிகளின் குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக அமைச்சர்கள், ஆட்சியர், எம்எல்ஏ முன்னிலையில் திறந்துவைக்கத் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருவதால், மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்துவிட்டு, செய்ய வேண்டிய பணிகள் குறித்து சகப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
மேலும், தண்ணீர் திறக்கப்படும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆகிய இடங்களில் எப்படி நிற்க வேண்டும் என்றும், தண்ணீர் திறக்கப்படும் இடத்தில் தகுந்த இடைவெளியுடன் நின்று தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் பார்வையிட்டு அறிவுறுத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அனைத்து இடங்களையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.