திருச்சி: பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பகுதியில் நடைபெறும் வெள்ளிக்கிழமை சிறப்புத்தொழுகையில் பங்கேற்பதற்காக மதுரையைச் சேர்ந்த எட்டு இஸ்லாம் நண்பர்கள் காரில் புறப்பட்டுச் சென்றனர்.
காரை மதுரை ஃப்ரெண்ட்ஸ் காலனியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் மகன் முஹம்மது உமர் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கார் துவரங்குறிச்சி அருகேயுள்ள செவந்தாம்பட்டி பிரிவு என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது இண்டிகேட்டர் போடாமல் மற்றொரு சாலையைக் கடக்க முயன்ற டிப்பர் லாரியின் பின்புறத்தில், பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த, அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்ட மீட்புப்படையினர்
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற துவரங்குறிச்சி காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில், இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த காமில் பாட்சா (51) பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த துவரங்குறிச்சி காவல் துறையினர் டிப்பர் லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்று ராமோஜி ஃபிலிம் சிட்டி திறப்பு: இது உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரம்!