திருச்சி மாவட்டம் உறையூரில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்று கலந்துரையாடினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், 'தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் யாரும் கூறவில்லை. மும்மொழி திட்டத்தில் இந்தி பயிலலாம் என்று கூறப்பட்டுள்ளதை சிலர் அரசியலாக்குகின்றனர்.
இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இந்தியாவிலுள்ள பல மொழிகள்தான் எங்களது பலம் என்று பிரதமர் மோடி அமெரிக்காவில் பேசியுள்ளார். ஆனால், அதுகுறித்து யாரும் பேசுவது கிடையாது. தமிழ்நாடு கல்வி திட்டத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித அறிவியல் அறிவு இல்லை. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை என்று குறை கூறுகின்றனர்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அங்கு யார்? யார்? பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் என்பதையும் கட்சிதான் முடிவு செய்யும். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர்கள் யாரும் இதுவரை அறிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறதா? என்ற கேள்வியே தவறானது.
தமிழ்நாடு பாஜகவிற்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார். தலைவர் இல்லை என்ற காரணத்தால் கட்சிப் பணி எதுவும் நின்றுவிடவில்லை' என்றார்.