கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துவிதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் அந்தக் கல்லூரிகளின் 2019-2020 கல்வி ஆண்டு இறுதித் தேர்வு நடத்த முடியாமல் போனது.
ஊரடங்கு அமலுக்கு வந்து தற்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஊரடங்கில் தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இதனால் கல்லூரிகளின் இறுதித்தேர்வை நடத்த தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகள் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில், இறுதித்தேர்வை அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படியும், தகுந்த இடைவெளியுடனும் செப்டம்பர் 15ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், துறைத் தலைவர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை உடனே தொடங்குமாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணவுப் பொருட்களில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து பாதுக்காத்துக்கொள்வது எப்படி? - மாநகராட்சி விளக்கம்!