திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்கள், காவல்துறையினரை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, காடுவெட்டி தியாகராஜன் மீது கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் தியாகராஜன் மீது காட்டுப்புத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, தெற்கு மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்டோர் கடந்த இரண்டு தினங்களாக காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து கண்டன போராட்டங்கள் நடத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டு திமுகவிற்கு எதிராகவும், திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்தும், அவரைக் கைது செய்யக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தலைமை நிலையப் பேச்சாளர் நெத்தியடி நாகேந்திரன், மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர் ஜாக்குலின், ஆவின் தலைவர் கார்த்திகேயன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர்!