திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்துக் கடத்தி எடுத்துவரப்பட்ட ரூ. 20 லட்சத்து 37 ஆயிரத்து 126 மதிப்புள்ள 338 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்குத் தினசரி விமானச் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
விமானத்தில் வரும் பயணிகள் தங்கங்களைச் சட்ட விரோதமாகக் கடத்தி வருவதும், அதை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 5) திருச்சி விமான நிலையத்திற்குச் சிங்கப்பூரிலிருந்து ஏர் இண்டிகோ விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
எனவே அந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ஆண் பயணி ஒருவர் நூதன முறையில் எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட 338 கிராம் எடையுள்ள தங்கம் சிக்கியது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 20 லட்சத்து 37 ஆயிரத்து 126 ரூபாய் ஆகும்.
அதனைத் தொடர்ந்து, கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் கடத்தலில் ஈடுபட்ட பயணி இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா ? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா ? வேறு வழக்குகள் அவர்கள் மீது உள்ளதா இவர்களுக்குப் பின்புலமாக யார் செயல்படுகிறார்கள், எந்த நோக்கத்திற்காகத் தங்கங்களைச் சட்ட விரோதமாகக் கடத்தி செல்கின்றனர் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
இதனை அடுத்து, விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அந்த பயணிகளை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், உயிரினங்கள் கடத்தல் போன்ற சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால், தொடர்ந்து தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே, இத்தகைய கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: இடுப்பில் துணியைக் கட்டி கடத்தி வந்த தங்க கட்டி! மும்பையில் ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!