மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பரவை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை - திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரையிலான பகுதியில் பாதுகாப்பு இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் பலர் உயிரிழந்து வரும் நிலையில், பலத்த காயங்களும் அடைகின்றனர். இந்த சாலையில் விபத்தைத் தடுக்க கோரி நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் இல்லை.
எனவே பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரையிலான சாலையில் விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே பலமுறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன் பேரில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த சாலையை நேரில் ஆய்வு மேற்கொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மற்றும் நீதிபதி மரிய கிளாட் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இந்த சாலையில் விபத்தைத் தடுப்பதற்கு சென்னை தொழில்நுட்ப (IIT) கழகத்தில் உள்ள சாலை பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியை நாட வேண்டும். இந்த வழக்கில் அந்த அதிகாரிகள் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். மேலும் இந்த சாலையில் விபத்தைத் தடுப்பது குறித்து போக்குவரத்து காவல் துறையில் மாநகர, ஊரக பகுதியில் உள்ள இரு திட்டமிடல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.