தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் அவ்வப்போது கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், உளவுப்பிரிவு போலீசார் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இனிகோ நகர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சில மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இனிகோ நகர் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தியதில் சுமார் 70 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
தொடர்ந்து தூத்துக்குடி கோட்ட சுங்கத்துறை துணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் 70 லட்ச ரூபாய் மதிப்பிலான தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3,000 கிலோ புளி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் 10 மூட்டைகளில் பட்டாசு மற்றும் நரம்பு வலி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
பின்னர், உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர். உரிய விசாரணைக்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் உண்மையான மதிப்பு தெரிய வரும் என சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளை கண்டதும் தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.