இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலத்தை விட அதிகமாக 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
அதனால் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு என்று 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானத்தை அதே ஆண்டின் செப்டம்பர் 9ஆம் தேதி நிறைவேற்றிய தமிழ்நாடு அமைச்சரவை, அன்றே ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதித்து வருகிறார்.
இத்தகைய நிலையில், ஆளுநர் முடிவெடுக்கும் வரை தம்மை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கை இன்று விசாரித்த நீதியரசர் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, 7 தமிழர்களின் விடுதலை குறித்த தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையின்றி தாமதம் செய்து வருவதை கடுமையாக விமர்சித்திருக்கிறது.
"ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அதன்பிறகு தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியும் என்றும் ஆளுநர் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கிற்கும் எம்.டி.எம்.ஏ விசாரணைக்கு எந்த தொடர்பும் இல்லை. 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவருடன் சம்பந்தமில்லாத மனிதர்களைப் பற்றி தான் எம்.டி.எம்.ஏ விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக நடந்தப்பட்டு வரும் அந்த அமைப்பின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவை குறித்த ஆவணங்களையெல்லாம் ஆளுநரிடம் அளித்து தெளிவுபடுத்தினீர்களா?" என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
7 தமிழர் விடுதலை பற்றி இரண்டு வாரங்களில் ஆளுநர் முடிவெடுக்க முடியும் என்ற நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவது நியாயமல்ல; அதை ஏற்க முடியாது என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பாமக என்னென்ன வாதங்களை பொதுவெளியில் முன்வைத்து வந்ததோ, அதையே தான் உச்ச நீதிமன்றமும் இப்போது கூறியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி 7 தமிழர் விடுதலையை தமிழ்நாடு அரசு விரைந்து உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.