அரசின் ஆணையை மீறி கரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி, மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "கரோனா தொற்று சீனாவில் தொடங்கி, 210க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் அதிக அளவு பணம் வசூலித்து வருகின்றனர். இதனை தடுக்க தமிழ்நாட்டு அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதன்படி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15,000 மட்டுமே வசூலிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
கரோனா நோய் தொற்றினால் மக்கள் பலவிதமான பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கரோனா நோய் தொற்றினால் மக்களிடையே வீண் பதற்றம் ஏற்படுகிறது. மேலும் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை செய்யும் இடங்கள் சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகிறது. அதேபோல, கரோனா நோய் தொற்று அல்லாத மற்ற நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் அவர்களுக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. எனவே பொது மக்கள் பயன்பெறும் வகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் காலியாக உள்ள கரோனா படுக்கைகள் குறித்த தகவலை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
கரோனா நோய் தொற்றால் இறந்தவர்கள் விவரங்களை அரசு மூடிமறைப்பதாக எழும் குற்றச்சாட்டிகளின் மீதான உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வர வேண்டும். கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தான உணவு வழங்குதல், கரோனா சிகிச்சை மற்றும் தங்கும் இடங்களை ஒரு நாள்களுக்கு மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் தொற்றினால் இறந்தவர்களின் உடலை முறையாகவும், மாண்புடனும் அடக்கம் செய்ய வேண்டும்.
மேலும் தமிழநாட்டின் அரசு ஆணையின் படி தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு வசூலிக்கப்படும் தொகையினை முறைப்படுத்த வேண்டும். கரோனா அல்லாத கர்ப்பிணி பெண்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் " என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று(ஆக.4) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "தனியார் மருத்துவமனையில் 10 நாள்கள் கரோனா சிகிச்சைக்கு 8 லட்சம் வரையிலும் வசூலிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.