மணலூர் அகழாய்வு பணிகள் நடக்கும் இடத்தின் அருகே அமைந்துள்ள கண்மாயில் குடிமராமத்து பணி என்ற பெயரில் சவுடு மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சிவகங்கை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த மகேஷ் ராஜா என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "மதுரை மாவட்ட எல்லை பகுதியில் (சிவகங்கை மாவட்டம் அருகே) வைகை நதிக்கரைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர். இந்தப் பகுதியில் தற்போது தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் கீழடி பகுதி உட்பட பல இடங்களில் சங்க காலம் முதல், வைகை நதிக் கரையோரம் வாழ்ந்த மனிதர்கள் நாகரீகமாக வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள், பண்டைய பொருள்கள் போன்றவை கி.மு 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலித்து வருகிறது.
அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவைக் கடந்தே குடிமராமத்து பணிகள் நடைபெற வேண்டும்.
ஆனால், அதை பின்பற்றாமல் விவசாய நிலங்களில் சவுடு மண் எடுப்பதாக கூறி, அரசின் அனுமதி பெற்று அரசு விதிகளை மீறி விவசாய நிலங்களில் ஆழமாக தோண்டி அளவுக்கதிகமாக மணலை அள்ளி வருகின்றனர்.
மேலும், குடிமராமத்து பணிகள் என கூறி அரசை ஏமாற்றி மணல் கொள்ளையும் நடைபெறுகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதுடன், தொல்லியல் ஆய்வுகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் புகைப்படத்துடன் கூடிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.